2 Jan 2015

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இரண்டு கடைகள் உடைப்பு……

SHARE
- கமல்- 
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட  களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்குட்பட்ட இரண்டு கடைகள் ஒரே நேரத்தில்  இன்று வெள்ளிக் கிழமை (02) உடைக்கப்பட்டு சேதப்படுத்தப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தில் பட்டிருப்பு பிரதேசத்தில் அமைத்துள்ள கி.வாமதேவன் என்பவரின் தேனீர்கடை ஓன்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள கு.மோகன் என்பவரின் பலசரக்குக் கடையொன்றுமே இவ்வாறு சேதத்திற்கு உள்ளக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…..

மைத்திரிபால சிறிசேனவின் போஸ்ரர்கள் இரு கடைகளிலும் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் அப்போஸ்ரர்களை இனத்தெரியாத நபர்கள் புதன் கிழமை அதனை கிழித்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மைத்திரியின் போஸ்ரர் வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன.  இதனையடுத்தே இக்கடையுடைப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கடை உரிமையாளர்களின் கருத்து

தேனீர்கடை உரிமையாளர் கி.வாமதேவன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்…..

நான் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்கின்றேன். இது எனது உரிமை இதனை எவராலும் தடுக்க முடியாது. இந் நிலையில் எனது ஆதரவினை பலபேரிடம் கூறியுள்ளேன். 
எனது கடைக்கு மேல் குறித்த வேட்பாளரின் போஸ்ரர்கள் ஒட்டப் பட்டிருந்தது இதனை கிழித்துச் சென்றார்கள் தற்போது எனது கடையினை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். நான் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதைப் பொறுத்துக் கொள்ள இயலாத தீய சக்திகள்தான் இதனை மேற்கொண்டிருக்கின்றது. என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து பலசரக்குக் கடை உரிமையாளர் கு.மோகன் கருத்துத் தெரிவிக்கையில்.

எனது கடைக்கு முன்னால் மைத்திரிபால சிறிசேன அவர்களின் போஸ்ரர் ஒட்டப்பட்டு இருந்தன, அதனை புதன் கிழமை இனந் தெரியாதவர்களால் கிழிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதே இடத்தில் வியாழக் கிழமை குறித்த வேட்பாளரின் போஸ்ரர் ஒட்டப்பட்டன. இதனை யார் ஒட்டுகின்றனர் யார் கிழிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியாது. பின்னர் எனது கடை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப் பட்டுள்ளது. எனக்கும் அரசியலுக்கும் எந்தவித்த தொடர்பும் இல்லை இருந்தும் இச்சம்பவதில் நான் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் என நினைத்தே இடம் பெற்றுள்ளதாக சந்தேகிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வெள்ளிக் கிழமை காலை விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்
இச் சம்பவமானது நாட்டின் அரசினை அவமதிக்கும் செயல் இதனை யார்தான் மேற்கொண்டிருந்தாலும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். அரச பாதுகாப்புப் படையினர் 24 மணித்தியாலயமும் இரவு பகலாக பணியில் ஈடுபடும் போது குறிப்பிட்ட இடத்தில் நடந்தேறிய சம்பவத்திற்கு அரசாங்கம்தான் பொறுப்புக் கூறவேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் எதிரணியின் வெற்றியே பன்மடங்காக்கும் செயற்பாடாகவே அமையும் என நான் கருதுகின்றேன். சம்மந்தப் பட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்தற்குரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு குறித்த சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் இச்சம்பவத்தில் களவுகள் ஏதும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்நெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: