கல்முனையின் நவீன அபிவிருத்தித் திட்டங்களுக்காக தனியான அபிவிருத்தி
அதிகார சபை ஒன்று உருவாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று
சனிக்கிழமை இரவு கல்முனை நகரில் இடம்பெற்ற ஐ.தே.க. பொதுக் கூட்டத்தில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முணைத் தொகுதி இணைப்பாளர் சட்டத்தரணி
எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கொட்டும் மழைக்கு
மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர். அங்கு ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில்
கூறியதாவது;
“2005 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது மயோன்
முஸ்தபாவின் கோரிக்கையையின் பேரில் கல்முனை நகர அபிவிருத்தித்
திட்டத்திற்காக தனியான அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை ஏற்படுத்துவேன் என்று
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனை நாம் ஆட்சிக்கு
வந்தால் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்.
அதன் மூலம் கல்முணைத் தொகுதியில் பரந்துபட்ட அபிவிருத்திப் பணிகள்
முன்னெடுக்கப்படும். கல்முனை பொதுச் சந்தைக்கு புதிய கட்டிடத் தொகுதி
அமைக்கப்படும். விளையாட்டு மைதானங்கள் நவீன முறையில் அபிவிருத்தி
செய்யப்படும். கல்முனையை ஒரு புதிய நகரமாக மாற்றுவோம். தேவையான காணிகளைப்
பெற்றுத்தருவோம்.
அத்துடன் ஒலுவில் துறைமுகத்தை கப்பல் வரக்கூடிய வர்த்தக துறைமுகமாக
மாற்றி அமைப்போம். எமது ஆட்சியில் கப்பல் வராத துறைமுகத்தை அமைக்க
மாட்டோம். திருக்கோணமலை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வோம். அம்பாறை
விமான நிலையத்தையும் விஸ்தரிப்பு செய்வோம். நெல்லின் விலையை 50 ரூபா
உத்தரவாத விலையாக நிர்ணயிப்போம்.
வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வு காண்போம். இதற்காக பத்து லட்சம் தொழில்
வாய்ப்புகளை வழங்குவோம். தெரிவித்தார். இப்பிராந்தியங்களில் தொழில்
பேட்டைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். பச்சைத் தண்ணியை
குடித்துக் கொண்டு பஸ்ஸில் செல்லும் வெளிநாட்டவர்கள் எங்களுக்குத்
தேவையில்லை. அதற்குப் பதிலாக நாளாந்தம் 250 டொலர்களை செலவு செய்யக்
கூடியவர்களே தங்களுக்குத் தேவை.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாட்டில் நல்லாட்சியையும் இனப்
பிரச்சினைக்கான தீர்வுகளையும் காண்போம். அதன் மூலம் நிரந்தர சமாதானம்,
நிலையான அபிவிருத்திகள் ஏற்படுத்தப்படும்.
தற்போது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் விலைவாசி உயர்வால்
அவதியுறுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தததும் உடனடியாக 10 அத்தியாவசியப்
பொருட்களின் விலைகளை குறைப்போம். பெட்ரோல், மண்ணெண்ணெய், கேஸ்,
போன்றவற்றின் விலைகளும் குறைக்கப்படும்.
சமுர்த்திக் கொடுப்பனவுகளை இரண்டு மடங்காக அதிகரிப்போம். அரசாங்க,
தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிபோம். பெப்ரவரியில் அரசாங்க
ஊழியர்களுக்கான சம்பளத்தில் 5000 ரூபா அதிகரிப்பை மேற்கொள்வோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்
(LLRC ) பரிந்துரைகளை அவர் அமுல்படுத்தவில்லை.
தமிழ், முஸ்லிம்
சமூகங்களுக்கு நியாயங்களை வழங்கவில்லை.
அதற்கு மாறாக தனது அரசியலைக் கொண்டு செல்ல இனவாதத்தைக் கையிலெடுத்தார்.
மதவாதத்தைத் தூண்டினார். பலசேனாக்களை உருவாக்கினார். அதனுடாக பள்ளிவாசல்களை
தாக்கினார். தமிழ், முஸ்லிம் மக்களைத் தாக்கி அதன் மூலம் அரசியல் லாபம்
தேட முயற்சித்தார். இதன் மூலம் தெற்கில் தனது வாக்கு வங்கியை உயர்த்த
முயற்ச்சித்தார். இறுதியில் என்ன நடந்தது. ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை
விட்டு வெளியேறியது.
பின்னர் வியாழக்கிழமை இரவு ஜனாதிபதியுடன் இருந்து அப்பம் சாப்பிட்ட
மைத்திரி பாலசிறிசேன வெள்ளிக்கிழமை எம்முடன் இணைந்து பொது வேட்பாளராக
மாறினார். இப்போது மகிந்த ராஜபக்சவுடன் சிங்களவர்களும் இல்லை தமிழர்களும்
இல்லை முஸ்லிம்களும் இல்லை.
குடு விற்பதர்க்கும் கேசினோ போன்ற சூதாட்ட நிலையங்களை நிறுவுவதற்கும்
நடவடிக்கை எடுத்தார். எதனோல் வியாபாரத்துக்கு வழிவகுத்தார். இதற்க்கு
எதிரான கருத்துக்களைக் கூறமுற்பட்ட மகாநாயக்க தேரர்களுக்கு எதிராகவும்
செயற்பட்டார்.
தற்போது எனது நண்பர் மகிந்த ராஜபக்ச கடுமையாக உழைத்து களைத்து
விட்டதனால் ஜனவரி 8ம் திகதி நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு ஓய்வு
வழங்க வேண்டும். இதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தற்போது எல்லோரும்
ஒன்றினைந்துள்ளோம். மைத்திரிபால, சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, சம்பிக்க,
மனோ, றிசாத் உட்பட அவர்களது கட்சிகளும் தமிழ், முஸ்லிம் சிவில்
அமைப்புகளும் எம்முடன் இணைந்துள்ளன.
இலங்கையில் வாழும் எந்த நபருக்கும் தான் விரும்பிய சமயத்தைப்
பின்பற்றக்கூடிய உரிமை இருக்க வேண்டும். அதற்க்கு எவ்வித அச்சுறுத்தலும்
விடுக்க முடியாது. மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரையும் தராதரம்
பாராது சட்டத்தின் முன் நிறுத்துவோம். பள்ளிவாசல்களை உடைக்க மாட்டோம்.
அவற்றை பாதுகாப்போம். எவரும் தான் விரும்பிய மொழியைப் பேசுவதற்கு உரிமை
உண்டு. அதேபோன்று தான் விரும்பும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும்” என்று
ரணில் குறிப்பிட்டார்.
இப்பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா
கமகே, பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எஸ்.பி.மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.நபார், ஐ.தே.க.
கல்முணைத் தொகுதி பிரசார இணைப்பாளர் செயிட் அஸ்வான் மௌலானா உட்பட மற்றும்
பல பிரமுகர்களும் உரையாற்றினர்.(mm)
0 Comments:
Post a Comment