இயற்கை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது மக்கள்
பயிற்றுவிக்கப்படுவது காலத்தின் தேவையாகும் என கல்முனை மாநகர முதல்வர்
சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.
பத்தாவது வருட சுனாமி ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை
யிலேயே முதல்வர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“இயற்கை அனர்த்தங்கள் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்ற சோதனைகள் என்பது
எமது நம்பிக்கையாகும். அந்த வகையில் வெள்ள அனர்த்தம், சூறாவளி போன்றவற்றை
விட பூகம்பம், சுனாமி அனர்த்தம் போன்றவை பாரிய உயிரிழப்புகளையும் பாரிய
அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
அவ்வாறான ஒரு பேரழிவு மிக்க சுனாமி அனர்த்தத்தையே கடந்த 2004ஆம் ஆண்டு
டிசம்பர் 26 ஆம் திகதி நாம் எத்ரிர்கொண்டோம்.. இதனால் பல்லாயிரக்கணக்கான
மனித உயிர்கள் எம் கண் முன்னே காவு கொள்ளப்பட்டதுடன் பெரும் சொத்து
அழிவுகளையும் சந்தித்தோம். பொருளாதார வளங்களையும் இழந்தோம். தமது
உறவுகளையும் உடமைகளையும் இழந்த மக்கள் பெரும் அவலங்களை
எதிர்நோக்கியிருந்தனர்.
எவ்வாறாயினும் காலப்போக்கில் அவற்றில் இருந்து மீண்டு இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றோம். ஆனாலும் அன்று தமது வீடுகளை சுனாமிக்கு
பறிகொடுத்த சிலர் இன்றும் மாற்று வீடுகள் கிடைக்காமல் தகரக் கொட்டில்களில்
அவதியுறுவதை காண்கிறோம். தமது பூர்வீக தொழில்களை இழந்த சிலர் மாற்று
தொழில்களில் ஈடுபடுவதிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவை எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு புதிய உலகுக்கு எல்லோரையும்
தயார்படுத்துவது தொடர்பில் இன்றைய சுனாமி ஞாபகார்த்த தினத்தில்
சிந்திப்பதும் செயற்படுவதும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன்.
பொதுவாக எந்த இயற்கை அனர்த்தமாக இருந்தாலும் அவை இறைவனால்
ஏற்படுத்தப்படுகின்ற சோதனைகள் என்பது எமது நம்பிக்கையாகும். அவற்றை நாம்
எல்லோரும் எதிர்கொண்டுதானாக வேண்டும். ஆனாலும் உயிரிழப்புகளையும்
சேதங்களையும் இயன்றவரை குறைத்துக் கொள்வதற்கான தற்காப்பு நடவடிக்கைகள்
குறித்து மக்களுக்கு அறிவூட்டி பயிற்றுவிப்பது அவசியம் என்று
கருதுகின்றேன்.
அத்துடன் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்காக இந்த
சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்பதுடன் உறவுகளை இழந்த மக்களின் துயரத்திலும்
பங்கு கொள்கின்றேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment