இலங்கை
இராணுவத்தினரின் சாகச, களியாட்ட நிகழ்வு இம்மாதம் 29,30 ஆம் திகதிகளில்
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில்
நடைபெறவுள்ளதாக 23ஆவது படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் தர்சன
ஹெட்டியாராய்ச்சி செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில், 231ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி
பிரிகேடியர் பாலித பெர்னாண்டோ, 232ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேணல்
ரவீந்திர டயஸ், 233ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் நந்தன
கத்துருசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் யுத்தத்தில் போரிடுவதற்கு மாத்திரமல்ல, இன்னும் பல
விடயங்களும் அவர்களுக்கு உள்ளன. இராணுவத்தினால் பல்வேறுபட்ட
அபிவிருத்திகளும் மக்கள் நலன் சார்ந்த வேலைகளும் செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், இராணுவத்தின் ஏனைய விடயங்களையும் காண்பிப்பதற்காகவே இந்த சாகச
நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு
மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் இக்கண்காட்சியை முற்றிலும் இலவசமாக
சகல மக்களும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி இரண்டு தினங்களும் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 6 மணிவரையிலும்,
இரவு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சாகச நிகழ்வுகளில் 2000 இராணுவ சிப்பாய்களின் பங்குபற்றலுடன் இராணுவ
அணிவகுப்பு, விமானத்திலிருந்து பறக்கும் பரசூட் குடை சாகசம், மோட்டார்
சைக்கிள் சாகசம், நாயின் வேடிக்கை விளையாட்டு, இராணுவ வாகனங்கள், ஆட்லறி
அணியினரின் காட்சி, தீப்பந்தத்துக்குள் பாய்தல், கலாச்சார இசை நிகழ்ச்சிகள்
மற்றும் துணிச்சல் மிகு சாகச நிகழ்ச்சிகள் என பல நடாத்துவதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் பார்ப்பதற்கான போக்குவரத்து வசதிகளும் செய்து
கொடுக்கப்படும். எனவே பார்வையாளர்கள் இச்சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என
கேட்டுக்கொண்டார்.
சிவில் சமூகத்திற்கு இராணுவம் பற்றிய அச்சம் இல்லாமல் செய்வதே எமது நோக்கமாகும். நாங்கள் மக்களுடன் நெருங்கி வருகின்றோம்.
அவர்களுக்கான தேவைகளை மனிதாபிமான நோக்கில் இனங்கண்டு செயலாற்ற
காத்திருக்கின்றோம் எனவும் கூறியதுடன் இராணுவத்தில் தமிழ், முஸ்லிம்கள்
இணைந்து கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு
கொண்டுள்ளன.
இராணுவத்தின் வாகனப்பழுதுபார்த்தல், குழாய் போறுத்துதல், மேசன், வாகன
ஓட்டுனர், மரவேலைகள் செய்தல், உள்ளிட்ட பல்வேறுபட்ட வேலைகளுக்கும்
பிரிவுகளுக்கும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
அதே நேரத்தில் இராணுவத்தினரின் இசைக்குழுவிலும் இணைந்து கொள்ளமுடியும்.
இதற்கு விசேடமான தமிழ் பாரம்பரிய கலைகள், பாடல் திறமைகள் உள்ளவர்கள்
இணைக்கப்படுகிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில், இங்கு இணைந்து கொள்பவர்கள்
தங்களுடைய மாவட்டங்களிலேயே பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பெண்கள் காலையில் தொழிலுக்கு வந்து மாலையில் வீடு செல்லமுடியும்.
இதே போன்றதொரு வாய்ப்பு ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்தவருக்குக் கிடைப்பதில்லை எனவும் கேட்டுக் கொண்டார்.
இம்மாதம் 29,30 ஆம் திகதிகளில், மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியப்
பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை இராணுவத்தினரின் சாகச,
களியாட்ட நிகழ்வுகளில் முதல் நாள் நிகழ்வில், பொருளாதாரப் பிரதி அமைச்சர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதியாக முன்னாள்
முதலமைச்சர் சி.சந்திரகாந்தனும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், அரசாங்க
அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்
தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதே நேரம், இரண்டாம் நாள் நிகழ்வில், உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சர்
பசீர் சேகுதாவூத் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக மீள்குடியேற்ற பிரதி
அமைச்சர் வி.முரளிதரனும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் கட்டளைத் தளபதி
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment