(லக்ஷ்மன்)
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கருத்திட்டத்தின் கீழ் உருவான "கிழக்கின் முதலீடு" என்ற தொனிப் பொருளில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள முதலீட்டு அரங்க செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் பூரண ஆதரவு வழங்குமென்றும் ஆளுநர் என்ற வகையில் அதற்கான சகல உத்தரவாதங்களையும் தாம் வழங்குவதாகவும் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம உறுதியளித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த துதலீட்டாளர் கலாநிதி தாவூத் தலைமையிலான முதலீட்டாளர்கள் ஆளுநரை சந்தித்து தமது எதிர்கால முதலீட்டு செயற்பாடுகள் குறித்து எடுத்துரைத்த போதே இந்த உத்தரவாதத்தை அவர் வழங்கியதாக முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
போர்முடிவுற்ற பின் இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதாகவும் நிரந்தர சமாதானத்தின் மற்றொரு நகர்வே அபிவிருத்தி என்றும் தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாணம் மகிந்த சிந்தனையை மையமாக கொண்டு செயலாற்றுவதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற இன, மத பேதமின்றி அனைவரின் ஒத்துழைப்பையும் கோருவதாகவும் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரின் செயற்பாடுகள், பொருளாதாரத் துறையில் நலிவடைந்தவர்களுக்கு விமோசனம் வழங்குமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மூவின மக்களையும் ஏறத்தாழ சம அளவில் கொண்ட இந்த மாகாணம் ஏனைய மாகாணங்களுக்கு முன் மாதிரியாக விளங்குவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு சகல உத்தரவாதங்களையும் வழங்குகின்றது. பாதுகாப்பை வழங்குகின்றது. தேவையான வசதிகளை வழங்குகின்றது. எனவே முதலீட்டாளர்கள் எந்த வித பயமுமின்றி முதலீடு செய்ய முடியும் என அவர் உறுதியளித்தார்.
தான் அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியாக இருப்பதால் இந்த விடயங்களை அரச தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கிழக்கின் முதலீடு தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ முதலீட்டாளர்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளையும் நம்பிக்கையையும் ஆளுநர் இதன்போது ஞாபகப்படுத்தினார்.
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீரின் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆளுநருடனான சந்திப்பு தமக்கு மிகுந்த உற்சாகத்தை தருவதாக கலாநிதி தாவூத் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் தவறானவை என்பதை ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் தாம் உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்த தாவூத், ஆளுநருடனான சந்திப்பு பயனளித்ததாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு தாம் ஒரு சுற்றுலாப் பயணியாக வந்த போது இவ்வாறான கிழக்கின் முதலீடு தொடர்பில் அறிந்து அதில் ஆர்வம் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் சிற்பி மஹாதீர் முஹம்மது போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவதை தாம் உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். உலகின் 30 வங்கிகளுக்கு சொந்தமான கலாநிதி தாவூத் முதலீட்டுத் துறையில் சிறந்த அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment