(திருமலை)
இலங்கையில் அமைதி சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் வளத்துக்குமான அமோகமான வாய்ப்புக்கள் உள்ளமையின் காரணமாகவே இலங்கையில் முதலீடு செய்ய தீர்மானித்ததாக உலகப் பிரசித்தி பெற்ற சவூதி அரேபியக் கம்பனியான ஹாதி ஹமாம் பல்தேசிய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் முஹமட் ஹாதி ஹமாம் தெரிவித்தார். ஏற்கனவே 700 கப்பல்களுக்கு மேல் சொந்தமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கப்பல் கட்டுதலிலும் துறைமுக அபிவிருத்தியிலும் கப்பல் திருத்த பணிகளிலும் முக்கிய பங்களிப்பு வகிக்குமென அவர் குறிப்பிட்டார்.
44மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உலகப் பிரசித்தி பெற்ற சவூதி அரேபியக் கம்பனியான ஹாதி ஹமாம் பல்தேசிய நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையே கடந்த வருடம் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி சீகல்ப் சிப்யார்ட்டின் கப்பல் கட்டும் மற்றும் திருத்தப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலைஅண்மையில் (கடந்த 20 ஆம் திகதி) காலித் துறைமுகத்தில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்.
மேற்குகிற்கும் கிழக்கிற்கும் இடையிலான கப்பல் பயணப்பாதையில் மிக அத்தியாவசிய தேவையான கப்பல் கட்டும் சேவையையும் திருத்த வேலையையும் வழங்கக் கூடிய ஒரு சிறப்பான மத்திய நிலையமாக காலி அமைந்திருப்பதன் காரணமாகவும் இந்த முழுப்பிராந்தியத்திலும் அவ்வாறான ஒரு நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிய கப்பல்களும், சுற்றுலா கப்பல்களும் மற்றும் 5000 டொன் எடை கொண்ட கப்பல்களும் இங்கு கட்டப்படுமெனவும் எண்ணெய் மற்றும் வாயு ,வர்த்தக துறைகளிலும் இந்த கப்பல் சேவைகள் ஈடுபடுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000ற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலை பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஹாதி ஹமாம் , கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி,மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், காலி நகர சபை தவிசாளர் , துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
1979 இல் ஆரம்பிக்கப்பட்ட ஹாதி ஹமாம் சவூதி நிறுவனம் சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்து எண்ணெய் மற்றும் வாயு துறைகளில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் சவூதி அரேபியாவிலும் கிளை நிறுவனங்கள் பஹ்ரென் மற்றும் துபாய், சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் உள்ளதாக. கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment