25 Jan 2014

பிறரிடம் கையேந்தும் நிலைமையை மாற்றி தம்மையும் தமது சமூகத்தையும் வலுவாக்கும் சக்தியாக தமிழ் பேசும் சமூகம் மாற்றமடைய வேண்டு

SHARE
(சக்தி)

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டமையை இனத்துரோகம் எனச் சுட்டிக்காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கின் யதார்த்தத்தை உணராமல் மக்களை எவ்வாறு வழிநடத்த போகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பினார்.

பிறரிடம் கையேந்தும் நிலைமையை மாற்றி தம்மையும் தமது சமூகத்தையும் வலுவாக்கும் சக்தியாக தமிழ் பேசும் சமூகம் மாற்றமடைய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் அரசடித்தீவு பொது மைதானத்தில்  புறநெகும திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை கடந்த 21 அன்று  திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
இன்றொரு பேச்சு நாளையொரு பேச்சு என்று நாளுக்குநாள் தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டு வெறும் பத்திரிகை அரசியல் செய்வதால் மாத்திரம் தமிழ்ச் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லையெனவும் அவர் கூறினார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் 

நாம் கிழக்கு மாகாணத்தை 2008ஆம் ஆண்டு பொறுப்பெடுத்ததிலிருந்து  2012வரை பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தோம். ஏனைய மாகாணங்கள் உற்றுப் பார்க்குமளவிற்கு கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியத்துடனான நல்லாட்சியை  நடத்திக்காட்டினோம். 

இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தாம் துணை நிற்பதாகக் குறிப்பிட்டு முதலமைச்சு உட்பட அனைத்து அமைச்சுக்களையும் நீங்களே நிர்வகியுங்களென அன்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இனத்துரோகம் இழைத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு மகஜர்களை அனுப்பிவைத்துள்ளனர். 

அதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இது முஸ்லிம்களுக்கு எதிரான கோரிக்கையல்ல எனவும் கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது'  என்றார். 
கட்சிக்குள்ளேயே நிலையான கோட்பாடு இல்லாது மாற்றுக் கருத்துக்களுடன் பயணிப்பவர்கள் எவ்வாறு மக்களை வழிநடத்தப் போகின்றனர் எனவும் அவர்  கேள்வியெழுப்பினார்.

இந்த வைபவத்தில் பட்டிப்பளை பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் கா.சித்திரவேல் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பட்டிப்பளை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் த.பேரின்பராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: