(கஜன்)
நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக்கிடந்த பொதுக்கட்டடம் ஒன்றையும் அதன் சுற்றுவட்டத்தையும் மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை கிராமமக்கள் மாபெரும் சிரமதானம் செய்து கடந்த 26 அன்று சுத்தப்படுத்தியுள்ளனர்.
விசேடதேவையுள்ள ஓர் இளைஞனின் தலைமையில் ஒன்றுகூடிய மக்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏறாவுர்ப்பற்றுப் பிரிவின் தொண்டர்களையும் இணைத்துக் கொண்டு இந்த சிரமதான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இக்கிராமத்து மக்கள் ஒன்று கூடுவதற்கும் தங்களது பொழுது போக்கு நடிவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஓர் பொதுவான இடம் இல்லாத நிலையில் இப்படி ஒரு கட்டடம் நீண்டகாலமாக பாவிக்கப்படாதிருந்தததையிட்டு கவலை கொண்டிருந்த மக்கள் இச்சிரமதான நடவடிக்கையின் மூலம் தங்களுக்கிருந்த இந்தக்குறைபாட்டினை போக்கிக் கொள்ள முடியும் எனக்கருதுகின்றனர்.
கடந்த 2006 மற்றும் 2007 காலப்பகுதியில் போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்திருந்த இப்பகுதி மக்கள் மீளக்குயமர்ந்த பின் தங்கள் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி வருகின்றனர். வெளியுதவிகள் பெருமளவு கிடைத்திருக்காத போதிலும் மக்கள் சொந்த முயற்சியினால் தங்கள் தொழில்களை மீண்டும் ஆரம்பித்து முடிந்த வரையில் சொந்தக்காலில் நிற்க பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்த்தான் கூடிக்கதைப்பதற்கும் தங்கள் அநுபவங்களைப்பகிர்ந்து கொள்வதற்கும் தீர்மானங்களை எடுப்பதற்கும் கருத்தரங்குகள் , கூட்டங்கள், முதலானவற்றை நடாத்துவதற்கும் பொது இடம் தேவை என்பதை உணர்ந்த மக்கள் தாங்களாகவே முன் வந்து நேற்றயதினம் சிரமதானத்தை மேற்கொண்டனர்.
“இத்தகைய நிலை படிப்படியாக ஏற்படுமானால் வெளியுதவிகளில் மக்கள் தங்கியிருக்கத் தேவையில்லை” என்ற கருத்து உள்ளுர் மக்களிடம் துளிர்விட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது.
0 Comments:
Post a Comment